மேகக் கணிமையின் அத்தியாவசிய பண்புகள் / Cloud Computing Essential Characteristics
1. பரந்த பிணைய அணுகல் / Broad Network Access
அனைத்து மேகக் கணிமை வளங்களும் நேரடி அணுகல் தேவை இல்லாமல் நிர்வகிக்க மற்றும் பயன்படுத்த ஒரு பிணையத்தின் வழியே கிடைக்கும். இந்த பிணையம் சேவையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேகக் கணிமை வளங்கள் எங்கிருந்தும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும், ஆனால் அணுகல் கொள்கைகளால் அவை கட்டுப்படுத்தப்படலாம். இது தவிர, மேகக் கணிமை சேவையாளர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கள் வளங்களுக்கு இடையே பாதுகாப்பான பிணைய இணைப்பை கொண்டிருக்க வேண்டும்.
2. விரைவான மீள்மை / Rapid Elasticity
-
நுகர்வோர், வள திரள்வில் இருந்து பயன்படுத்தும் வளங்களை அளவை அதிகரிக்க அல்லது குறைக்க அனுமதிக்கிறது.
-
அளவை மாற்றும்போது வழங்குதல் / நீக்குதல் பெரும்பாலும் தானியக்கமாக நிகழும்.
-
இது வாடிக்கையாளர்கள் தேவையுடன் வள நுகர்வை மிகவும் நெருக்கமாக பொருத்த அனுமதிக்கிறது.
-
விரைவான மீள்மை என்பது இரண்டு தானியக்க அளவுமாற்றத்தை ஆதரிக்க வேண்டும்
- செங்குத்தான அளவுமாற்றம்
- கிடைமட்ட அளவுமாற்றம்
-
செங்குத்தான அளவுமாற்றம்: தற்போது இருக்கும் அமைப்பில் வளங்களின் அளவை மாற்றுதல்.
-
கிடைமட்ட அளவுமாற்றம்: புதிய வளங்களை சேர்ப்பதன் மூலம் அளவை மாற்றுதல். புதிய வளங்கள் அதே இடத்திலோ அல்லது புதிய இடத்திலோ இருக்கலாம்.
3. அளவிடப்பட்ட சேவை / Measured Service
நுகர்வோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வளங்களை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும், தேவைப்பட்டால், அதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். மேகக் கணிமை வளங்கள் நீர் மற்றும் மின்சாரம் போன்ற நுகரப்படுவதால் இது பயன்பாட்டு கணிமை என்றும் அழைக்கப்படுகிறது (பயன்பாட்டுகேற்ற கட்டணம்). மேகக் கணிமை வளங்களின் அளவீட்டு அலகு தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட கட்டண காலத்திற்கு ஆகக்கூடிய பயன்பாட்டுச் செலவு (சாத்தியமான / தோராயமான) மேலாண்மை தளத்தில் காட்டப்பட வேண்டும்.
4. தேவைக்கேற்ப சுய சேவை / On-Demand Self Service
மேகக் கணிமை சேவையாளரின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளுடன் பேசும் தேவையின்றி, மேகக் கணிமை நுகர்வோர் தங்கள் வளங்களை தாங்களே நிர்வகிக்க வழிவகுக்கம் சுய சேவை அமைப்பை கொண்டிருக்க வேண்டும். மேகக் கணிமை சேவையாளர்கள் வளங்களை அணுகவும் நிர்வகிக்கவும் மேலாண்மைத்தளம் (Management Plane) வழியாக இந்த சுய சேவை அம்சத்தை வழங்குகின்றனர்.
மேலாண்மைதத்தள அணுகல் முறைகள் * இணைய வழி கட்டுப்பாட்டு முனையம் (Web Console) * பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) * மென்பொருள் உருவாக்க கருவிப்பெட்டி (SDK)
5. வள திரள்வு / Resource Pooling
மேகக் கணிமை சேவையாளர்கள் வன்பொருள் உள்கட்டமைப்பிலிருந்து வள திரள்வு செய்து அதனை உருவிலா நிலையில்(abstracted format) வழங்குகின்றனர். உருவிலா நிலை மெய்நிகராக்கத்தால் செயல்படுத்தப்படுகிறது. நுகர்வோர் தேவைக்கேற்ப வள திரள்விலிருந்து வளங்களை ஒதுக்க மற்றும் வழங்க தானியக்க ஒருங்கிணைந்த திட்டமிடலை (automated orchestration) பயன்படுத்துகிறார்கள்
6. பல்குத்தகைத் தன்மை / Multitenancy
மேக்க கணிமை இயற்கையாகவே பல்குத்தகைத்தன்மை கொண்டுள்ளது. பல வெவ்வேறு நுகர்வோர் ஒரே வள திரள்வை பகிர்ந்து கொள்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு நுகர்வோரும் பிரிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்படுகிறார்கள். பிரித்தல் மேகக் கணிமை சேவையாளர்கள் வெவ்வேறு குழுக்களுக்கு வள திரள்விலிருந்து வளங்களைப் பிரித்து பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. தனிமைப்படுத்துதல் ஒரு நுகர்வோர் மற்றோர் வளங்களை பார்க்கவோ, மாற்றவோ முடியாது என்பதை உறுதி செய்கிறது. பல்குத்தகைத்தன்மை ஒரு வணிகம் அல்லது நிறுவனத்திற்குள் வெவ்வேறு துறைகளுக்கு இடையில் அல்லது வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடையில் வளங்களைப் பிரிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.