கட்டச்சங்கிலி அறிமுகம்
கட்டச்சங்கிலி / தொடரேடு என்பது இணையர் பிணையத்தில் (P2P network) இருக்கும் பல்வேறு கணினிகளில் உள்ள ஒரு பரவலாக்கப்பட்ட பேரேடு (Distributed Ledger). அனைத்து கணினிகளும் அதே பேரேடு நகலைக் கொண்டிருக்கும்.
இலக்கமுறைச் சொத்துக்களைக் (Digital Assets) கண்காணிக்க உதுவும் இந்த தொழில்நுட்பம் கணினிகளின் நினைவகத்தில் இயங்குகின்ற செயல்பாடுகளாக உள்ளன
உதாரணமாக, ஒரு பரிவர்த்தனை பதிவேட்டை எடுத்துக்கொள்வோம். பதிவேட்டில் பல பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் பல பரிவர்த்தனைகளின் பதிவுகள் இருக்கும். மேலும் ஒவ்வொரு பக்கத்திலும், பக்கத்தின் எண் குறிக்கப்பட்டிருக்கும்.
பக்கத்தின் எண்களை கொண்டு, பரிவர்த்தனை பதிவுகளை நாம் எளிதில் காணலாம். ஒரு பக்கம் தொலைந்தாலோ அல்லது மாற்றப்பட்டாலோ அதனை எளிதில் கண்டுபிடிக்க இயலும்.
இங்கே, பதிவேடு என்பது கட்டச்சங்கிலி, பதிவேட்டின் ஒரு பக்கம் என்பது ஒரு கட்டம், பக்கங்களில் உள்ள பதிவுகள் பரிவர்த்தனைகளை குறிக்கும்.
கட்டச்சங்கிலியின் பங்கேற்பாளர் (இணையர்) ஒவ்வொருவரும் அதே பேரேடு நகலைக் கொண்டுள்ளதால் தரவைப் பதிவு செய்வதற்கு நம்பகமான மூன்றாம் தரப்பினரை (வங்கி, அரசு) சார்ந்து இருக்கும் நிலையை கட்டச்சங்கிலி நீக்குகிறது.