இலக்கமுறைச் சான்றிதழ் / Digital Certificate

இலக்கமுறைச் சான்றிதழை ஒரு மின்னணு அடையாள ஆவணமாகக் கருதலாம். இவை X.509 சான்றிதழ் என்றும் அறியப்படுகிறது. இலக்கமுறைச் சான்றிதழ் என்பது ஒரு பொதுத் திறவி மற்றும் அதன் உரிமையாளர் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்த வழிவகுக்கிறது சான்றிதழ் ஆணையத்தால் சான்றளிக்கப்பட்டு உரிமையாளருக்கு வழங்கப்படுகிறது. உரிமையாளர் முடிந்தவரை இலக்கமுறை சான்றிதழை பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே செல்லுபடியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்சியை பொதுத் திறவி உள்கட்டமைப்பு நிர்வகிக்கிறது.

இலக்கமுறைச் சான்றிதழ் வடிவங்கள் / Digital Certificate Formats

PEM format (Privacy Enhanced Mail) / தனியுரிமை மேம்படுத்தப்பட்ட அஞ்சல்

இவ்வடிவம் X.509 சான்றிதழ்கள், சான்றிதழ் ஒப்பமிடல் கோரிக்கைகள் மற்றும் மறைப்பியல் திறவிகளுக்கான மிகவும் பொதுவான வடிவமாகும். பெரும்பாலான சான்றிதழ் ஆணையங்கள் அடிப்படை 64 ஆஸ்கி முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்களை வழங்குகின்றன இந்த வடிவச் சான்றிதழ் கோப்பு வகைகள் .pem, .crt, .cer, or .key என முடியும். .pem வகையில் ஒரே கோப்பில் இறுதி அமைப்புச் சான்றிதழ், ஆணையத்தின் சான்றிதழ் மற்றும் தனித் திறவியை சேமிக்க முடியும். இறுதி அமைப்புச் சான்றிதழ், ஆணையத்தின் சான்றிதழ் ஆகியவற்றை தனியாக .crt or .cer என்ற வடிவிலும் சேமிக்க முடியும். தனித் திறவியை .key என்ற வடிவில் சேமிக்க முடியும்

PKCS #7 format (Public Key Cryptography Standard / பொதுத் திறவி மறைப்பியல் தரநிலை)

இந்த வடிவத்தில் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ் சங்கிலிகளை மட்டுமே சேமிக்க முடியும். தனித் திறவியை சேமிக்க இயலாது. இந்த வடிவச் சான்றிதழ் அடிப்படை 64 ஆஸ்கி முறையில் குறியாக்கம் செய்யப்பட்டவை இந்த வடிவச் சான்றிதழ் கோப்பு வகைகள் .p7b or .p7c என முடியும். பயனர்களுக்கு சான்றிதழ் சங்கிலிகளை வழங்க இந்த வடிவமைப்பை வழக்கமாக சான்றிதழ் ஆணையங்கள் பயன்படுத்துகின்றன.

DER format – (Distinguished Encoding Rule / தனித்துவமான குறியீட்டு விதிகள்)

இது இருமமுறையில் குறியாக்கம் செய்யப்பட்ட X.509 சான்றிதழ்கள் மற்றும் தனித் திறவிகளுக்கான வடிவம். இந்த வடிவச் சான்றிதழ் கோப்பு வகைகள் .der அல்லது .cer என முடியும். பொதுவாக ஜாவா சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது

PFX format (PKCS #12) (Personal Information Exchange / தனிப்பட்ட தகவல் பரிமாற்றம்)

இந்த வடிவச் சான்றிதழ்கள் இருமமுறையில் குறியாக்கம் செய்யப்பட்டவை. PFX என்ற சொல் PKCS #12 உடன் மாறி மாறி பயன்படுத்தப்படுகிறது. இந்த வடிவத்தில், கடவுச்சொல் பாதுகாப்புடன், ஒரே கோப்பில் இறுதி அமைப்புச் சான்றிதழ், ஆணையத்தின் சான்றிதழ் மற்றும் தனித் திறவியை சேமிக்க முடியும் இந்த வடிவச் சான்றிதழ் கோப்பு வகைகள் .pfx அல்லது .p12 என முடியும். இந்த வடிவச் சான்றிதழ்கள் முக்கியமாக விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தப்படுகிறது