இணைய நெறிமுறை முகவரி தொகுப்புகள் & தன்னாட்சி அமைப்பு எண்கள் / IP Address Space & Autonomous System Number (ASN)
இணைய இருத்திய எண்கள் ஆணையம் இணைய எண் வளங்களான இணைய நெறிமுறை முகவரி தொகுப்புகள் மற்றும் தன்னாட்சி அமைப்பு எண்கள் ஆகியவற்றை ஒதுக்கும் பொறுப்பை வட்டார இணைய பதிவகங்களிடம் (Regional Internet Registry) வழங்குகிறது. தற்பொழுது ARIN, LACNIC, RIPE NCC, AFRINIC & APNIC என 5 வட்டார இணைய பதிவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
வட்டார இணைய பதிவகங்கள் நேரடியாக இணைய நெறிமுறை முகவரி தொகுப்புகள் மற்றும் தன்னாட்சி அமைப்பு எண்களை நிர்வகிக்கலாம் அல்லது தேசிய இணைய பதிவகத்திடம் (National Internet Registry) அந்த பொறுப்பை ஒப்படைக்கலாம்.
உதாரணமாக, இந்தியாவில் இணைய பெயர்கள் மற்றும் எண்களுக்கான இந்திய பதிவகம் (Indian Registry for Internet Names and Numbers) https://www.irinn.in என்ற நிறுவனத்திடம் இந்திய பதிவகத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எல்லை நுழைவாயில் நெறிமுறை வழித்திட்டத்தை (Border Gateway Protocol Routing) பயன்படுத்த ஒவ்வொரு தன்னாட்சி அமைப்புக்கும் ஒரு தனித்துவமான தன்னாட்சி அமைப்பு எண் ஒதுக்கப்படும். இது இணையத்தில் உள்ள ஒவ்வொரு பிணையத்தையும் தனித்துவமாக அடையாளம் காண வழிவகுக்கிறது.
ஒரு தன்னாட்சி அமைப்பு என்பது இணையத்திற்கு பொதுவான, தெளிவாக வரையறுக்கப்பட்ட வழித்திட்ட கொள்கையை (Rounting Policy) முன்வைக்கும் ஒற்றை நிர்வாக நிறுவனம் அல்லது களத்தின் சார்பாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிணைய இயக்குனர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இணைக்கப்பட்ட இணைய நெறிமுறை வழித்திட்ட முன்னொட்டுகளின் (IP Routing Prefix) தொகுப்பாகும்.